| யுனெடெட் ஸ்டேட் மற்றும் இந்திய எஜுகேஷனல் பவுன்டேசன் இணைந்து உலக அளவில் ஆசிரியர் பரிமாற்றம் மூலம் கலாசாரம் மற்றும் கல்வி முறைகள் பற்றிய கருத்தரங்கை அமெரிக்காவில் நடத்துகின்றன. இதில் பங்கேற்பதற்காக இந்திய அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். மூன்று கட்டமாக டெல்லியில் தேர்வு நடந்தது. இறுதிச்சுற்றுக்கு 80 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதியில் தென்னிந்திய அளவில் 2 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கோவையைச் சேர்ந்த ஆசிரியை பிரமிளாராஜும் ஒருவர். சூலூரில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நாளை அமெரிக்கா செல்கிறார். ஆசிரியை பிரமிளாராஜ் கூறுகையில், "இந்திய கலாசாரம் மற்றும் கல்வி முறையை அமெரிக்காவில் கற்றுத் தருவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை" என்றார். அமெரிக்கா செல்லும் ஆசிரியைக்கு சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். |
Showing posts with label News - Tamilnadu. Show all posts
Showing posts with label News - Tamilnadu. Show all posts
| காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி சாகுபடிக்காகவும் ஆடிப்பெருக்கு பண்டிகைக்காகவும் மேட்டூர் அணை கடந்த 28-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று கல்லணை வந்தடைந்தது. இதையடுத்து, இன்று காலை 8.30 மணிக்கு பாசனத்துக்காக கல்லணை திறக்கப்பட்டது. முன்னதாக அணையில் உள்ள விநாயகர், கருப்பண்ணசாமி, ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கும், காவிரி தாய்க்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் ஆகியோர் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய இடங்களின் மதகு பட்டனை அழுத்தி தண்ணீர் திறந்துவிட்டனர்.அதைத் தொடர்ந்து காவிரி ஆற்றில் நெல் விதை மற்றும் நவதானியங்கள், மலர்களை தூவி வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர்கள் சண்முகம் (தஞ்சை), சந்திரசேகரன் (திருவாரூர்), முனியநாதன் (நாகை) மற்றும் திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மூர்த்தி, எம்எல்ஏக்கள் துரைசந்திரசேகரன், மகேஷ் கிருஷ்ணசாமி மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். காவிரி, வெண்ணாற்றில் வினாடிக்கு தலா 4 ஆயிரம் கனஅடி வீதமும், கல்லணை கால்வாயில் 1000 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 1000 கனஅடி வீதமும் தண்ணீர் விடப்படுகிறது. ஒருவாரத்தில் இந்த தண்ணீர் கடைமடைப்பகுதியை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
வாக்குப்பதிவு இயந்திரம் மீதான புகாரை நிரூபியுங்கள்: தேர்தல் ஆணையம் பா.ம.க.வுக்குக் கடிதம்
Posted by
Admin
| இதற்காக, தங்களுக்கு ஏற்ற நேரத்தையும், தேதியையும் சில நாள்களில் தெரிவிக்கும்படியும் அந்தக் கட்சியை ஆணையம் கோரியுள்ளது. ஒரு குறிப்பிட்ட வாக்காளருக்கே வாக்குகள் பதிவாகும் வகையில் மின்னணு இயந்திரத்தை மாற்றி அமைக்க முடியும் என்றும், மக்களவைத் தேர்தலில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றதாகவும் பாமக குற்றம்சாட்டி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில், வாக்குப் பதிவு இயந்திரத்தின் மாதிரி போன்ற கருவியை சென்னையில் செய்தியாளர்களிடம் இயக்கிக் காட்டினார் அக் கட்சி நிறுவனர் ராமதாஸ். வருங்காலங்களில் தேர்தலுக்கு வாக்குச்சீட்டு முறையையே மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் பா.ம.க. கோரி வருகிறது. இதுதொடர்பாக அக் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், "இந்தியத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது' எனக் கூறி தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு ஒன்றையும் அவர் அனுப்பியிருந்தார். இதற்கு ஆணையத்தின் செயலாளர் கே.அஜய்குமார் அளித்துள்ள பதில்: "தேர்தல்களில் ஆணையத்தால் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்வதற்கு வாய்ப்பில்லை. ஒரு வேட்பாளருக்கு அத்தனை வாக்குகளையும் விழும்படி செய்து விட முடியாது. ஆணையத்துக்கு அனுப்பியுள்ள மனுவில் தாங்கள் (பாமக) தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை அல்ல. அதனால் ஏற்படும் விளைவுகள் கடுமையானவை ஆகும். எனவே, தேர்தல் ஆணையம் பயன்படுத்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள். தேர்தல் ஆணையத்தின் இடத்தில், உங்களுக்கு (பாமக) வசதிப்பட்ட நாளில், நேரத்தில் இந்த செயல் விளக்கத்தை வைத்துக் கொள்ளலாம். எந்தத் தேதி என்பதை சில நாள்களில் தெரிவிக்கவும்'' என்று தேர்தல் ஆணையத்தின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேதி எப்போது? தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள பதில் குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸிடம் கேட்டபோது, "ஆணையத்தின் பதில் எங்களுக்கு வெள்ளிக்கிழமை கிடைத்தது. எனவே, எங்களது செயல் விளக்கத்தை தேர்தல் ஆணையத்திடம் நேரில் செய்து காட்டும் நாளை ஒரு வாரத்துக்குள் அறிவிப்போம்'' என்றார். Source - www.newindianews.com |
| கடலூர் அருகே அரக்காடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜவேல். இவரது மகன் கிருஷ்ணராஜ். இவர்கள் புதிய வீடு கட்டி வந்தனர். கட்டுமானப் பணி பாதியில் நின்றதால், சேத்தியாத்தோப்பு பகுதியில் வசிக்கும் கதிரேசன் என்ற சாமியாரை பார்த்து குறி கேட்டனர். அப்போது, ‘சாமியார் ஒரு சிறுவனை பலி கொடுத்தால் கஷ்டம் நீங்கும்’ என்று குறி சொன்னார். இதையடுத்து, தனது பக்கத்து வீட்டுக்காரரின் ஆறரை வயது மகன் சதீஷ்குமாரை கிருஷ்ணராஜ் கடத்தினார். அவனுடைய கழுத்தை நெரித்து நரபலி கொடுத்தனர். தகவல் அம்பலமான பின், சாமியார் கதிரேசன், கிருஷ்ணராஜ் உட்பட 10 பேர் மீது நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கை, கடலூர் விரைவு நீதிமன்றம் விசாரித்து, சாமியார் கதிரேசன் மற்றும் கிருஷ்ணராஜிக்கு ஆயுள் தண்டனையும், 6 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 2 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து, தண்டனை பெற்றவர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நெல்லிக்குப்பம் போலீசாரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு, நீதிபதிகள் சொக்கலிங்கம், கர்ணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குழந்தையை பலி கொடுத்த சாமியார் கதிரேசன், கிருஷ்ணராஜிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தும், மற்றவர்களுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தும் தீர்ப்பு கூறினர். மேலும், தண்டனையை அதிகப்படுத்த கோரி போலீசார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர். Source - http://www.newindianews.com/ |
| தென் மாவட்டங்களில் முக்கிய அதிமுக தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முதலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலர், ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டச் செயலர், மாநில அமைச்சர் என படிப்படியாக வளர்ச்சி அடைந்தவர். 8 ஆண்டுகள் தூத்துக்குடி மாவட்ட அதிமுகவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்தார். இந்நிலையில் திமுக முக்கிய தலைவர்களுடன், குறிப்பாக மு.க. அழகிரியுடன் ரகசிய தொடர்பு வைத்திருக்கிறார் என்ற புகாரையடுத்து, அனிதா ராதாகிருஷ்ணன் மீது கட்சித் தலைமைக்கு அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலையில் அனிதா ராதாகிருஷ்ணனின் மாவட்டச் செயலர் பதவியை கடந்த செவ்வாய்க்கிழமை பறித்த ஜெயலலிதா, மறுநாளே அவரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார். இதையடுத்து, வியாழக்கிழமை மாலை சென்னை கோபாலபுரத்தில் தமிழக முதல்வர் மு. கருணாநிதியை சந்தித்துப் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், தனது எம்எல்ஏ பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார். தமிழக முதல்வர் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவுக்காக பெங்களூர் செல்ல உள்ளார். அவர் அங்கிருந்து திரும்பிய பின்னர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவில் இணைந்தால், தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்டச் செயலர் என். பெரியசாமியுடன் இணைந்து அவரால் அரசியல் நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக மாவட்டச் செயலர் என். பெரியசாமி தனது 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் திமுகவுக்கு மிகவும் விசுவாசம் உள்ளவராக இருந்து வந்துள்ளார். 6-வது முறையாக மாவட்டச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்டச் செயலராக இருந்து வருகிறார். தமிழக முதல்வர் கருணாநிதியின் நன்மதிப்பை பெற்ற பெரியசாமி, "கருணாநிதியின் முரட்டுப் பக்தர்' என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு முன் தாக்குப்பிடிக்க முடியாமல் பல தலைவர்கள் ஒதுங்கிக்கொண்டனர். ஆனால், பெரியசாமிக்கு இணையாக அரசியல் செய்யும் அளவுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் பலம் பொருந்தியவராக இருப்பார். கட்சித் தலைமையும் அந்த அளவுக்கு அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், அனிதா ராதாகிருஷ்ணனின் வருகையால் பெரியசாமியின் ஆதரவாளர்கள் கலக்கம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவில் இணைவதால் இப்போதைக்கு அண்ணாச்சிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால், அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுகவில் வளர்ந்தது போல் இங்கேயும் காய்களை உரிய முறையில் நகர்த்தி வளரத் தொடங்கினால், அண்ணாச்சிக்கு பிரச்னைதான் என பெரியசாமியின் தீவிர ஆதரவாளரான மாவட்ட நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்டச் செயலராக இருந்த ஆவுடையப்பனுக்கு எதிராக கருப்பசாமி பாண்டியன் வளர்ந்ததுபோல தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியசாமிக்கு எதிராக அனிதா ராதாகிருஷ்ணன் உருவாவார் என்றார் திமுக ஒன்றியச் செயலர் ஒருவர். இதை மற்றொரு தரப்பினர் திட்டவட்டமாக மறுத்தனர். திமுகவில் தூத்துக்குடி என்றால் அண்ணாச்சிதான். அவருக்கு எதிராக யாரும் அரசியல் செய்ய முடியாது. அதை கட்சியும் அனுமதிக்காது என்று நம்பிக்கை தெரிவித்தனர் அவர்கள். மேலும், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியை குறி வைத்து சிலர் அரசியல் செய்து வந்தனர். அவர்கள் மத்தியிலும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட அரசியலில் இன்னும் பல மாற்றங்கள் அடுத்தடுத்து நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. |
