ஒரு வைகறையின் புலர்வில்
மீண்டும் நான்
குளிர் காய்கிறேன்
ரைகானின் தென்றலில்…
சென்ற வருடத்து
ரமழான் ஊட்டிய
ஆன்மீகப் பயிற்றுவிப்புக்கள்
தெருவோரத்து அநாதையாய்
என் இதய வேக்காட்டில்…
உலகத்து இன்பங்கள்
என் அடிச்சுவடுகளை
மோப்பமிட்டபோது….
ஆறுதல் என நினைத்து
படாடோபத்தை என்
தலையில் தூக்கி வைத்தேன்.
எத்தனை ரமழான்கள்
என் மூச்சுக் காற்றுடன்
கலந்து விட்டன!
பெறப்பட்ட உணர்வுகளோ
உலகத்தின் மடியில்
மீண்டும் மீண்டும்
முருங்கையேறும்
வேதாளமாய்…
என் உணர்வுகளுடன்
அலைமோத காத்துக்கிடக்கிறது
என் வீட்டு முற்றத்தில்
ரமழான்…
அது நன்மைகளின் உறைவிடம்
அமைதியின் இருப்பிடம்
சுவர்க்கத்தின் முகவரி…
என் ஆன்மாவின் அழுகுரல்
இன்னும் என் செவிப்பறைகளில்…
ஈமானிய வரலாறு எழுத
மீண்டும் அசை போடுகிறது
என் பேனாமுனை…
என் சிந்தனைதான் இன்னும்
ஒரு முழத்து ஈமானுடன்
விலாசமற்று அநாமதேயமாய்…
தொலைந்துபோன என்
மார்க்கத்தின் சின்னங்களுக்காய்
ஏங்கித் தவிக்கிறது என் உள்ளம்…
நாளைய சுவனத்தின் சுகந்தத்திற்காய்…
என் தேசமும் இந்த
ரைஹானின் தென்றலில் குளிர் காயட்டும்…
hafeel
ஏறாவூர்

0 comments