என்னவென்று சொல்வேனடி
என் தோழி நீயும் கேளடி
பூவாக இருந்த நான்
காம்பை உதறியதைச்
சொல்லவா?
என் இதயமோ
பள்ளத்தில் பாய்ந்துவிட்டதைச்
சொல்லவா?
கம்பீர சோகமொன்றிற்குள்
இருள் குவியல்கள்
ஒன்று சேர்ந்திருப்பதைச்
சொல்லவா?
என்னவென்று சொல்வேனடி
என் தோழி நீயும் கேளடி
எருக்கலம் பூவாக
என் வாழ்வும் பாழாகுமென்று
எப்போதும்
நானோ நினைத்ததில்லை
தாமரையாக நான் மலர்ந்து
வாசமுள்ள மல்லிகையாக
மணம் வீசி நின்றேன்
சூரியப் புலர்வைக் கண்ட
தெருவாக
அந்தத் தெருவே மயங்கும்
தேவதையானேன்
என்னைத் தரிசிப்பதற்காக
தவித்து நிற்கும் இளசுகளில்
இவன் மட்டும் விதிவிலக்கு
இவன் கண்களில் ஊற்றெடுத்த
காதலின் பார்வையோ
சுனாமி அலையாக எழுந்து
என் மனத் தாழ்ப்பாழைப்
பிய்த்தெறிந்து
உட்புகுந்த வேகத்தில்
ஒளியாகக் கலந்து
என்னைத் தீண்டியதால்
எனக்குள் ஒரு பிரளயம்
அதனால் தானோ?
என் உயிர்க் காதல்
உண்மையென்றால்
என் உயிர்
அவன் வசமாக வேண்டும்
என்றான்!
மனமோ மூச்சிரைக்க
விழிப்படலமோ மெல்ல
அவனை நோக்க
என்னைத் தொலைத்து விட்டு
நம்பிக்கைகளைச் சுமந்ததை
என்னவென்று சொல்வேனடி
என் தோழி நீயம் கேளடி
தானாக வந்து
இதயத்தைத் தந்தவன்
இவனோ!
காணாமல் எங்கே? சென்றான்!
கண்ணீரை உகுத்து
கனத்துப் போன விழிகளோ
தினமும் சிரமமாக விரிய
பிரிவின் ஏக்கத்தை
புரிந்து கொண்டேன்
என்னை விட்டுப் பிரிந்து
இவன் சென்றதை
என்னவென்று சொல்வேனடி
என் தோழி நீயும் கேளடி
அந்தப் பௌர்ணமி இருளில்
இவனைச் சந்தித்த பின்
என் உடைந்து போன
கை வளையலின்
கண்ணாடித் துண்டுகள்
எப்போதும்
என் சேமிப்பில் இருப்பதை
என்னவென்று சொல்வேனடி
என் தோழி நீயும் கேளடி

0 comments