| தென் மாவட்டங்களில் முக்கிய அதிமுக தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முதலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலர், ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டச் செயலர், மாநில அமைச்சர் என படிப்படியாக வளர்ச்சி அடைந்தவர். 8 ஆண்டுகள் தூத்துக்குடி மாவட்ட அதிமுகவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்தார். இந்நிலையில் திமுக முக்கிய தலைவர்களுடன், குறிப்பாக மு.க. அழகிரியுடன் ரகசிய தொடர்பு வைத்திருக்கிறார் என்ற புகாரையடுத்து, அனிதா ராதாகிருஷ்ணன் மீது கட்சித் தலைமைக்கு அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலையில் அனிதா ராதாகிருஷ்ணனின் மாவட்டச் செயலர் பதவியை கடந்த செவ்வாய்க்கிழமை பறித்த ஜெயலலிதா, மறுநாளே அவரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார். இதையடுத்து, வியாழக்கிழமை மாலை சென்னை கோபாலபுரத்தில் தமிழக முதல்வர் மு. கருணாநிதியை சந்தித்துப் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், தனது எம்எல்ஏ பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார். தமிழக முதல்வர் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவுக்காக பெங்களூர் செல்ல உள்ளார். அவர் அங்கிருந்து திரும்பிய பின்னர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவில் இணைந்தால், தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்டச் செயலர் என். பெரியசாமியுடன் இணைந்து அவரால் அரசியல் நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக மாவட்டச் செயலர் என். பெரியசாமி தனது 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் திமுகவுக்கு மிகவும் விசுவாசம் உள்ளவராக இருந்து வந்துள்ளார். 6-வது முறையாக மாவட்டச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்டச் செயலராக இருந்து வருகிறார். தமிழக முதல்வர் கருணாநிதியின் நன்மதிப்பை பெற்ற பெரியசாமி, "கருணாநிதியின் முரட்டுப் பக்தர்' என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு முன் தாக்குப்பிடிக்க முடியாமல் பல தலைவர்கள் ஒதுங்கிக்கொண்டனர். ஆனால், பெரியசாமிக்கு இணையாக அரசியல் செய்யும் அளவுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் பலம் பொருந்தியவராக இருப்பார். கட்சித் தலைமையும் அந்த அளவுக்கு அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், அனிதா ராதாகிருஷ்ணனின் வருகையால் பெரியசாமியின் ஆதரவாளர்கள் கலக்கம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவில் இணைவதால் இப்போதைக்கு அண்ணாச்சிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால், அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுகவில் வளர்ந்தது போல் இங்கேயும் காய்களை உரிய முறையில் நகர்த்தி வளரத் தொடங்கினால், அண்ணாச்சிக்கு பிரச்னைதான் என பெரியசாமியின் தீவிர ஆதரவாளரான மாவட்ட நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்டச் செயலராக இருந்த ஆவுடையப்பனுக்கு எதிராக கருப்பசாமி பாண்டியன் வளர்ந்ததுபோல தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியசாமிக்கு எதிராக அனிதா ராதாகிருஷ்ணன் உருவாவார் என்றார் திமுக ஒன்றியச் செயலர் ஒருவர். இதை மற்றொரு தரப்பினர் திட்டவட்டமாக மறுத்தனர். திமுகவில் தூத்துக்குடி என்றால் அண்ணாச்சிதான். அவருக்கு எதிராக யாரும் அரசியல் செய்ய முடியாது. அதை கட்சியும் அனுமதிக்காது என்று நம்பிக்கை தெரிவித்தனர் அவர்கள். மேலும், அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியை குறி வைத்து சிலர் அரசியல் செய்து வந்தனர். அவர்கள் மத்தியிலும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட அரசியலில் இன்னும் பல மாற்றங்கள் அடுத்தடுத்து நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. |

0 comments