Content feed Comments Feed


வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுமாறு, பாமகவை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்காக, தங்களுக்கு ஏற்ற நேரத்தையும், தேதியையும் சில நாள்களில் தெரிவிக்கும்படியும் அந்தக் கட்சியை ஆணையம் கோரியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட வாக்காளருக்கே வாக்குகள் பதிவாகும் வகையில் மின்னணு இயந்திரத்தை மாற்றி அமைக்க முடியும் என்றும், மக்களவைத் தேர்தலில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றதாகவும் பாமக குற்றம்சாட்டி வருகிறது.

இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில், வாக்குப் பதிவு இயந்திரத்தின் மாதிரி போன்ற கருவியை சென்னையில் செய்தியாளர்களிடம் இயக்கிக் காட்டினார் அக் கட்சி நிறுவனர் ராமதாஸ்.

வருங்காலங்களில் தேர்தலுக்கு வாக்குச்சீட்டு முறையையே மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் பா.ம.க. கோரி வருகிறது.
இதுதொடர்பாக அக் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில், "இந்தியத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது' எனக் கூறி தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு ஒன்றையும் அவர் அனுப்பியிருந்தார்.

இதற்கு ஆணையத்தின் செயலாளர் கே.அஜய்குமார் அளித்துள்ள பதில்:
"தேர்தல்களில் ஆணையத்தால் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்வதற்கு வாய்ப்பில்லை. ஒரு வேட்பாளருக்கு அத்தனை வாக்குகளையும் விழும்படி செய்து விட முடியாது. ஆணையத்துக்கு அனுப்பியுள்ள மனுவில் தாங்கள் (பாமக) தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை அல்ல. அதனால் ஏற்படும் விளைவுகள் கடுமையானவை ஆகும். எனவே, தேர்தல் ஆணையம் பயன்படுத்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள். தேர்தல் ஆணையத்தின் இடத்தில், உங்களுக்கு (பாமக) வசதிப்பட்ட நாளில், நேரத்தில் இந்த செயல் விளக்கத்தை வைத்துக் கொள்ளலாம். எந்தத் தேதி என்பதை சில நாள்களில் தெரிவிக்கவும்'' என்று தேர்தல் ஆணையத்தின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேதி எப்போது? தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள பதில் குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸிடம் கேட்டபோது, "ஆணையத்தின் பதில் எங்களுக்கு வெள்ளிக்கிழமை கிடைத்தது. எனவே, எங்களது செயல் விளக்கத்தை தேர்தல் ஆணையத்திடம் நேரில் செய்து காட்டும் நாளை ஒரு வாரத்துக்குள் அறிவிப்போம்'' என்றார்.

Source - www.newindianews.com

0 comments

Post a Comment

About Us