| காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி சாகுபடிக்காகவும் ஆடிப்பெருக்கு பண்டிகைக்காகவும் மேட்டூர் அணை கடந்த 28-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று கல்லணை வந்தடைந்தது. இதையடுத்து, இன்று காலை 8.30 மணிக்கு பாசனத்துக்காக கல்லணை திறக்கப்பட்டது. முன்னதாக அணையில் உள்ள விநாயகர், கருப்பண்ணசாமி, ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கும், காவிரி தாய்க்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் ஆகியோர் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய இடங்களின் மதகு பட்டனை அழுத்தி தண்ணீர் திறந்துவிட்டனர்.அதைத் தொடர்ந்து காவிரி ஆற்றில் நெல் விதை மற்றும் நவதானியங்கள், மலர்களை தூவி வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர்கள் சண்முகம் (தஞ்சை), சந்திரசேகரன் (திருவாரூர்), முனியநாதன் (நாகை) மற்றும் திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மூர்த்தி, எம்எல்ஏக்கள் துரைசந்திரசேகரன், மகேஷ் கிருஷ்ணசாமி மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். காவிரி, வெண்ணாற்றில் வினாடிக்கு தலா 4 ஆயிரம் கனஅடி வீதமும், கல்லணை கால்வாயில் 1000 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 1000 கனஅடி வீதமும் தண்ணீர் விடப்படுகிறது. ஒருவாரத்தில் இந்த தண்ணீர் கடைமடைப்பகுதியை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. |

0 comments