சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'எந்திரன்' படப்பிடிப்பின் போது மின்சாரம் தாக்கி பாதிப்புக்கு உள்ளான வாலிபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோமா நிலையில் உள்ள அந்த வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் 'எந்திரன்'. இதில் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை அடுத்த கொட்டிவாக்கத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
நேற்று மாலை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சில காட்சிகள் எடுக்கப்பட்டன. இதற்காக ஒளியமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்து சீனிவாசன் (20) எனும் ஊழியர் விபத்துக்குள்ளானார். உடனே அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அடையாறில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கோமா நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திடீர் விபத்தால் படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் அதிர்ச்சியும், பரபரப்பும் உண்டானது.
இந்த விபத்து குறித்து துரைப்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments