| கடலூர் அருகே அரக்காடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜவேல். இவரது மகன் கிருஷ்ணராஜ். இவர்கள் புதிய வீடு கட்டி வந்தனர். கட்டுமானப் பணி பாதியில் நின்றதால், சேத்தியாத்தோப்பு பகுதியில் வசிக்கும் கதிரேசன் என்ற சாமியாரை பார்த்து குறி கேட்டனர். அப்போது, ‘சாமியார் ஒரு சிறுவனை பலி கொடுத்தால் கஷ்டம் நீங்கும்’ என்று குறி சொன்னார். இதையடுத்து, தனது பக்கத்து வீட்டுக்காரரின் ஆறரை வயது மகன் சதீஷ்குமாரை கிருஷ்ணராஜ் கடத்தினார். அவனுடைய கழுத்தை நெரித்து நரபலி கொடுத்தனர். தகவல் அம்பலமான பின், சாமியார் கதிரேசன், கிருஷ்ணராஜ் உட்பட 10 பேர் மீது நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கை, கடலூர் விரைவு நீதிமன்றம் விசாரித்து, சாமியார் கதிரேசன் மற்றும் கிருஷ்ணராஜிக்கு ஆயுள் தண்டனையும், 6 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 2 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து, தண்டனை பெற்றவர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நெல்லிக்குப்பம் போலீசாரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு, நீதிபதிகள் சொக்கலிங்கம், கர்ணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குழந்தையை பலி கொடுத்த சாமியார் கதிரேசன், கிருஷ்ணராஜிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தும், மற்றவர்களுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்தும் தீர்ப்பு கூறினர். மேலும், தண்டனையை அதிகப்படுத்த கோரி போலீசார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர். Source - http://www.newindianews.com/ |

0 comments